நெல்லையில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-21 20:30 GMT

நெல்லை,

பென்சன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து கழக ஊழியர்கள்

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் நாளே பென்சன் வழங்க வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஓய்வு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16–ந் தேதி முதல் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் அருகே சாமியானா பந்தல் அமைத்து போரட்டம் நடத்தி வருகின்றனர்.

அரை நிர்வாண போராட்டம்

நேற்று 6–வது நாளாக இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சட்டை இல்லாமல் அரை நிர்வாணத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு மாநில துணை செயலாளர் காளத்திநாதன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர்கள் முத்துக்கிருஷ்ணன், பழனி, தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜெயபாண்டி, பத்மநாபன், தாஸ், கருப்பசாமி ஆகியோர் பேசினார்கள். போராட்ட பந்தலில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அவல நிலையை விளக்கி மேள, தாளத்துடன் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்