அம்பாசமுத்திரத்தில் சூறாவளியுடன் பலத்த மழை ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம்

அம்பாசமுத்திரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் குலை தள்ளிய நிலையில் தரையில் சாய்ந்து வீணாகின.

Update: 2017-03-21 20:30 GMT
அம்பை,

அம்பாசமுத்திரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் குலை தள்ளிய நிலையில் தரையில் சாய்ந்து வீணாகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சூறாவளியுடன் மழை

அம்பாசமுத்திரம்(அம்பை) அடுத்துள்ள காட்டுப்பத்து, ஊர்க்காடு, கோவில்குளம், சங்கரன்கோவில் சாலை, ஆவடியூர், ஏர்மாள்புரம், மணிமுத்தாறு, வாகைக்குளம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் ஏத்தன், கதளி, கோழிக்கோடு, நாடு உள்ளிட்ட பல்வேறு ரக வாழைகள் பயிரிடப்பட்டு உள்ளன.

பருவமழை பொய்த்த நிலையில், தாமிபரணி ஆற்றில் தண்ணீர் வற்றியதால் இப்பகுதியில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கிணற்று பாசனத்தின் மூலம் வாழை பயிர்களை விவசாயிகள் காத்து வந்தனர். தற்போது, இந்த வாழை மரங்கள் குலை தள்ளிய நிலையில் இருந்தன.

வாழை மரங்கள் சேதம்

தினமும் கிணற்றில் ஊறிய சிறிதளவு தண்ணீரின் மூலம் வாழை விவசாயத்தை விவசாயிகள் காப்பாற்றி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் இப்பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரம் பெய்த கன மழை மற்றும் சூறாவளி காற்றுக்கு இப்பகுதியில் உள்ள வாழை தோட்டங்களில் குலை தள்ளிய நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் தரையில் சாய்ந்து வீணாகின.

விவசாயிகள் கோரிக்கை

விரைவில் வாழைத்தார்களை அறுவடை செய்து சிறிது வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த இப்பகுதி விவசாயிகளுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாழை மரங்கள் சேதமடைந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

வாழை மர சேதங்களை வருவாய்த்துறையினரும், வேளாண் துறையினரும் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்