பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம்: அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
காரிகோடு பகுதியை சேர்ந்தவர் மோகனன். இவர் தோட்டத்தில் மிளகு பறிக்கும் போது எதிர்பாராத விதமாக ஏணியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தொடுபுழா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக கூடத்துக்கு அனுப்பப்பட்டது. இதேபோல், மரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்த வண்ணப்புரம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவருடைய உடலும் பிரேத பரிசோதனை செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்தது.
பேச்சுவார்த்தைமின்மோட்டார் பழுது காரணமாக பிரேத பரிசோதனை செய்வதற்காக கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுடைய உடல்களை பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது லாரியில் தண்ணீர் கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து உடனடியாக லாரியில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து உடல்களை பெற்றுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.