மீனவ பிரதிநிதிகள், பல்வேறு தரப்பினரிடம் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து கருத்துக் கேட்பு
புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக மீனவ பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் நாராயணசாமி கருத்துக்களை கேட்டறிந்தார்.
புதுச்சேரி,
வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் புதுச்சேரி சட்டசபை கூடுகிறது. இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்து சட்டசபை வளாகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் வைத்து முதல்–அமைச்சர் நாராயணசாமி கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார்.
கோரிக்கைகள்அதன்படி நேற்று மீனவர் அமைப்பு பிரதிநிதிகள், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பை சேர்ந்தவர்களிடம் தனித்தனியாக கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, நிதித்துறை செயலாளர் கந்தவேலு, துறை இயக்குனர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
முதல்–அமைச்சரிடம் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், மீனவ சமுதாயத்தை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க வேண்டும். மீனவர்களுக்கான 2 சதவீத இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். விசைப்படகு வாங்குவதற்கு 50 சதவீதம் மானியமும், 50 சதவீதம் கடனும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் மேம்பாட்டு கழகம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஆதிதிராவிடர் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘பாராளுமன்ற மேம்பாட்டு நிதியில் 16 சதவீதத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்க வேண்டும். வாரியத்தலைவர்கள் பதவியில் 16 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகளும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.