ஏழைகளுக்கு பயன் அளிக்கும் வகையில் வசதி படைத்தவர்கள் அரசு தரும் இலவசங்களை மறுக்க வேண்டும்
ஏழைகளுக்கு பயனளிக்கும் வகையில் வசதிபடைத்தவர்கள் அரசு தரும் இலவசங்களை மறுக்க வேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.;
புதுச்சேரி
பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் புதுவை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் காலைநேரத்தில் உணவு சாப்பிடாமல் கல்லூரிக்கு வந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்.
இவர்களில் ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவிகளை கண்டறிந்து முன்னாள் மாணவிகள் சங்கம் சார்பில் அவர்களுக்கு கல்வி கட்டணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ஏழ்மை நிலையில் இருந்து வரும் மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதிபலன் பார்க்காமல்...இந்த திட்டத்தின் தொடக்கவிழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பூங்காவனம் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் கந்தசாமி திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பாரதிதாசன் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முன்னாள் மாணவிகள் சங்கத்தினருக்கு எனது பாராட்டுகள். எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செயல்படும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களுக்கு வரும் கோப்புகளைகூட பார்த்து அனுப்புவதில் அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்யும் போக்கு உள்ளது. அதன்மூலம் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா? என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். யாராக இருந்தாலும் மக்களுக்கான சேவையை பிரதிபலன் பார்க்காமல் செய்யவேண்டும்.
இலவசங்களை மறுக்கவேண்டும்அரசால் நடத்தப்படும் மாணவ, மாணவிகள் விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை. இதற்கு அங்கு பணிபுரிவோரின் கவனக்குறைவே காரணம் ஆகும். அங்கு தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நமது மாநிலத்தில் அரசு சார்பில் பல்வேறு விதமான இலவச திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு அதிகாரிகள், வசதி படைத்தவர்கள் அரசு தரும் இலவசங்களை வேண்டாம் என்று மறுக்கவேண்டும். இதனால் மீதமாகும் நிதி ஏழைகளுக்கு பல்வேறு வழிகளில் பயன்தரும். இதுதொடர்பாக வருகிற ஏப்ரல் மாதம் முதல் கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளேன்.
தேர்தலில் தோல்விஇலவசங்களை வழங்காவிட்டால் தேர்தலில் தோல்வியடையும் நிலைதான் தற்போதைய காலகட்டத்தில் உள்ளது. நலிந்த பிரிவினர் மட்டுமே இலவச திட்டங்களால் பயன்பெறும் நிலை வரவேண்டும். கல்விதான் ஒருவரை வாழ்க்கை நிலையில் உயர்த்தும்.
இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், வையாபுரி மணிகண்டன், முன்னாள் மாணவிகள் சங்க தலைவி ரசியா, செயலாளர் ரஜினி சனோலியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.