தொகுப்பு வீடுகளை ஒப்படைக்கக்கோரி சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு

மண்ணாடிப்பட்டில் தொகுப்பு வீடுகளை ஒப்படைக்கக்கோரி ஆதிதிராவிடர்கள் நடத்திய சாலைமறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-03-20 22:45 GMT

திருக்கனூர்

புதுவை மாநிலம் மண்ணாடிப்பட்டு பேட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 46 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் இந்த வீடுகள் இதுவரை பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்த நிலையில் தொகுப்பு வீடுகளை பயனாளிகளிடம் வழங்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர்கள் நேற்று காலை மண்ணாடிப்பட்டு பஸ் நிலையம் அருகே திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்–இன்ஸ்பெக்டர் நியூட்டன் ஆகியோர் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதனை ஏற்காத மக்கள், தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கூறி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை

இதையடுத்து மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. டி.பி.ஆர்.செல்வத்துக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் டி.பி.ஆர்.செல்வம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தொகுப்பு வீடுகளை விரைவில் பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. உறுதி கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்