வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பெண் என்ஜினீயர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெண் என்ஜினீயர் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்து மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்தார்.
ஈரோடு
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி (வயது 23). என்ஜினீயர். இவர் தனது 5 மாத கைக்குழந்தையுடன் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்துக்கு சென்று, மாவட்ட வருவாய் அதிகாரி சதீசிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:–
எனக்கும் பெங்களூரை சேர்ந்த சின்னத்துரை என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடத்த பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது சின்னத்துரை மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று எனது பெற்றோரிடம் கூறினார்கள்.
வரதட்சணை கொடுமைஅதை நம்பி எனது பெற்றோர் சின்னத்துரைக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர். அதைத்தொடர்ந்து நானும், எனது கணவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தோம். எனது கணவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 5 மாதத்துக்கு முன்பு எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் எனது கணவர் பெற்றோருடன் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தினார்.
அதனால் நான் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனது கணவர் வீட்டில் இருந்து வெளியேறி ஈரோட்டில் உள்ள எனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன். எனவே வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய எனது கணவர், அவரது பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.