இரவு நேரம் வீடு புகுந்து பனியன் தொழிலாளி அடித்துக்கொலை; கள்ளக்காதலி படுகாயம்

ஊத்துக்குளியில் இரவு நேரம் வீடு புகுந்து பனியன் தொழிலாளி அடித்துக்கொலை; கள்ளக்காதலி படுகாயம் 3 மர்ம ஆசாமிகள் வெறிச்செயல்

Update: 2017-03-20 22:45 GMT

ஊத்துக்குளி,

ஊத்துக்குளியில் இரவுநேரத்தில் வீடு புகுந்து பனியன் தொழிலாளி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது கள்ளக்காதலி படுகாயம் அடைந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 3 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

பனியன் தொழிலாளி

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் உள்ள காங்கேயம் சாலை மேட்டுக்கடை பகுதியில் வசித்து வந்தவர் சந்திரகுமார் (வயது 36). நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் இவரது சொந்த ஊர் ஆகும். அவினாசியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக சந்திரகுமார் வேலை பார்த்து வந்தார்.

அதே பனியன் நிறுவனத்தில் சுமித்ராதேவி (32) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அவரது சொந்த ஊர் கேரள மாநிலம் ஆகும். திருப்பூர் பெருமாநல்லூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சுமித்ராதேவிக்கு, கவுதம் (15) என்ற மகனும், காயத்ரி(13) என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுளுக்கு முன்பு தனது கணவரை சுமித்ராதேவி பிரிந்து வாழ்ந்து வந்தார்.

கள்ளக்காதல்

இந்த நிலையில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சந்திரகுமாருடன், சுமித்ராதேவிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து அவர்கள் இருவரும் திருப்பூரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் ஊத்துக்குளியில் உள்ள மேட்டுக்கடைக்கு குடி வந்துள்ளனர்.

அதன்பின்னர் சொந்தமாக தொழில் செய்யலாம் என்று முடிவு செய்த சந்திரகுமார் மேட்டுக்கடையில் ஓட்டல் வைக்க முடிவு செய்தார். அதற்காக இடம் பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18–ந்தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 3 பேர் சுமத்ராதேவியின் வீட்டுக்கதவை தட்டியுள்ளனர். அப்போது அருகில் உள்ள ஓலை குடிசையில் தூங்கிக்கொண்டு இருந்த சந்திரகுமார் எழுந்து வந்து அந்த 3 வாலிபர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் சந்திரகுமாருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மீண்டும் அந்த வாலிபர்கள் 3 பேரும் ஒரு மோட்டார்சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சந்திரகுமார் வீட்டிற்கு வந்துள்ளார்.

அடித்துக்கொலை

பின்னர் சந்திரகுமாரை எழுப்பிய அந்த வாலிபர்கள், அவரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த சுமித்ராதேவியையும் அவர்கள் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பலமாக தாக்கப்பட்டதில் காயம் அடைந்த சந்திரகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சுமித்ராதேவி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுமித்ராதேவியின் வீட்டிற்கு அடிக்கடி இரவு நேரத்தில் பல ஆண்கள் வந்து செல்வதாகவும், தவறான உறவால் ஏற்பட்ட முன்விரோத தகராறில் சந்திரகுமார் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்