திருப்பூர் மாநகராட்சியில் ரூ.20 கோடியில் சைக்கிள் செல்வதற்கு தனிப்பாதை

திருப்பூர் மாநகராட்சியில் ரூ.20 கோடியில் சைக்கிள் செல்வதற்கு தனிப்பாதை அமைப்பதற்கான முதல் கட்ட பணி நேற்று தொடங்கியது.

Update: 2017-03-20 22:15 GMT

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகளில் அதிகமான வாகன போக்குவரத்து காரணமாக கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் திருப்பூர் உள்பட சில மாநகராட்சிகளில் போக்குவரத்தை மேம்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய 5 மாநகராட்சி பசுமை நடைபாதை மற்றும் சைக்கிள் பாதை அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. இதைத்தொடர்ந்து திருச்சி உள்ளிட்ட சில மாநகராட்சிகளில் சைக்கிள் பாதைகள் அமைக்கப்பட்டு விட்டன.

ரூ.20 கோடியில் சைக்கிள் பாதை

தற்போது திருப்பூர் மாநகராட்சியில் ரூ.20 கோடி மதிப்பில் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு, தனியாக நடைபாதை மற்றும் சைக்கிளில் செல்வதற்கு தனிப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் புதிய பஸ்நிலையம் முதல் பழைய பஸ்நிலையம் வரையும், மங்கலம் ரோட்டில் சில கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் ரெயில் நிலையம் வரையும் மொத்தம் 10 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பாதை அமைக்கப்பட இருக்கிறது.

இதற்காக திட்ட மதிப்பீடு செய்ய திருப்பூர் புதிய பஸ்நிலையம் பகுதியில் பி.என்.ரோட்டில் சர்வே செய்யும் முதல் கட்ட பணி நேற்று தொடங்கியது. சர்வே பணிகள் முடிந்ததும், இதுகுறித்த அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசு அனுமதி கிடைத்ததும் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்