சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலையை மூட வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

பல்லடம் அருகே சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தனியார் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2017-03-20 23:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது, பல்லடம் தாலுகாவில் உள்ள சித்தம்பலம் மற்றும் அதை சுற்றி உள்ள 10–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு முகத்தில் முககவசம் அணிந்து வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பல்லடம் ஒன்றியம் சித்தம்பலம் கிராம ஊராட்சியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து ‘பைபர்’ நூல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்ய காஸ்டிக் சோடா மற்றும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. பின்னர், அந்த கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் நிலத்தடியில் விடுவதால், நிலத்தடிநீர் மாசுபடுகிறது.

தொழிற்சாலையை மூட வேண்டும்

அத்துடன், பிளாஸ்டிக் மறுசுழற்சியின் போது, வெளிப்படும் நச்சு வாயு காற்றில் கலப்பதால் சுற்றுப்பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் காற்று மாசடைந்துள்ளது. தற்போது, இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று மற்றும் நீர் மாசு காரணமாக இதுவரை 21 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். மேலும் 5 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த 17–ந்தேதி இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தால் கடந்த இரு நாட்களாக சுற்றுவட்டார கிராமத்தில் கரும்புகை சூழந்து சுவாசிக்க முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் இந்த தொழிற்சாலையை மூட வேண்டும். அத்துடன் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

வாஷிங் நிறுவனம்

இதுபோல் திருப்பூர் கருப்பராயன் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் குடியிருப்பு பகுதியில் தனியார் வாஷிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து கடந்த ஒரு ஆண்டாக கரும்புகை மற்றும் நாற்றம் வீசுகிறது. இந்த புகையை சுவாசிப்பதால் சுவாச கோளாறு, மூச்சுத்திணறல் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்தமனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுபற்றி, உரிய விசாரணை நடத்த திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்