ஆனைமலை, சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் குடிநீர் கேட்டு 3 இடங்களில் சாலை மறியல்

ஆனைமலை, சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் குடிநீர் கேட்டு 3 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Update: 2017-03-20 23:15 GMT

ஆனைமலை

ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி அண்ணாநகர் பகுதியில் சுமார் 1500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு வேட்டைக்காரன்புதூர் குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 16 நாட்களாக குடிநீர் வராததால் அண்ணாநகர் பகுதி பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் திரண்டு வந்து நேற்று காலை 7.30 மணிக்கு பொள்ளாச்சி டாப்சிலிப் ரோடு அண்ணாநகர் பகுதியில் சாலையில் அமர்ந்து நேற்று காலை மறியல் செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 தனியார் மற்றும் ஒரு அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.

பேச்சுவார்த்தை

இதை அறிந்த ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி செயல்அலுவலர் நேரில் வந்து உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று பொதுமக்கள் கூறினர்.

இதையடுத்து காலை 10.30 மணிக்கு செயல் அலுவலர் இந்துமதி வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்தார். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மாணவ–மாணவிகள் அவதி

இதே போல் கம்பாலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாரமடையூர் பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்யக் கோரி ஆனைமலை பூலாங்கிணறு சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதை அறிந்த ஆழியாறு போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வனிதா ஆகியோர் வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கம்பாலப்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தை சரி செய்து தண்ணீர் கிடைக்க உடனே ஏற்பாடு செய்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர் வனிதா உறுதியளித்தார். அதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சாலைமறியல் போராட்டம் காலை நேரத்தில் நடைபெற்றதால் பொதுத்தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

சுல்தான்பேட்டை ஒன்றியம் கம்மாளப்பட்டி ஊராட்சி வரப்பாளையம் கிராமத்துக்கு கடந்த சில மாதங்களாக போதிய அளவு உப்புத்தண்ணீர் வினியோகம் செய்யவில்லை. அத்திக்கடவு குடிநீர் இணைப்பு இருந்தும் தண்ணீர் விட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த வரப்பாளையம் கிராம பொதுமக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் வந்து சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள பொள்ளாச்சி மெயின் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். ஆனால் ஒன்றிய ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் பொதுமக்களிடம் யார் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற குழப்பம் நிலவியது.

போக்குவரத்து பாதிப்பு

ஆனால் சுமார் 50 நிமிடங்களுக்கு பிறகு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் சூலூர் போலீசார் வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் பிரச்சினை குறித்து ஒன்றிய ஆணையாளரிடம் பேசி உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக பல்லடம் – பொள்ளாச்சி மெயின் ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்