கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை மனு ஊரக வேலை உறுதி திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும்

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரனிடம், கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2017-03-20 22:45 GMT

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கி, கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

அம்பை தாலுகா மூலச்சி கிராமம் செம்பத்திமேடு பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மூலச்சி பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் குமார் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள், கலெக்டர் கருணாகரனிடம் வேலை உறுதி திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 4 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடியை சேர்ந்த கிராம மக்களும், பிரம்மதேசம் அருகே உள்ள கவுதமபுரி பொது மக்களும், மேலபாலாமடை, கீழ பாலமடையை சேர்ந்த பொதுமக்களும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

முறைகேடு

வீரகேரளம் புதூர் கீழ வெள்ளகால் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தை சேர்ந்த சுமார் 250–க்கும் மேற்பட்டவர்கள் ஊரக வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு அங்குள்ள ஒரு வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 49 பேரின் சம்பள பணம் மோசடி செய்து வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

குடிதண்ணீர் பிரச்சினை

அம்பை அருகே உள்ள வெள்ளங்குடி கிராமம் வடக்கு பள்ளிக்கூட தெருவை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், “எங்கள் தெருவில் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு சரியாக தண்ணீர் வருவது இல்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் எங்கள் தெருக்கு சீரான குடி நீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறியிருந்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை அருகே உள்ள தாழையூத்து பசும்பொன் நகரை சேர்ந்த பொதுமக்களும், நாங்குநேரியை அடுத்த வடக்கு பத்தினிபாறையை சேர்ந்த பொதுமக்களும் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கருப்பு துணியால் கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்

அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் மாநில துணை தலைவர் ரமேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தங்கள் கண்களை கருப்பு துணியால் கட்டியபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், மானூர் யூனியன் கீழ ஓமநல்லூர், மேல ஓமநல்லூர், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள 430 ஏக்கர் பரப்பளவில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டு உள்ளன. அந்த மரங்கள் குளத்துக்குள்ளேயும் நடப்பட்டு உள்ளன. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சும் யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

பள்ளிக்கூடம் அருகே டாஸ்மாக் கடை

ஆலங்குளம் அருகே உள்ள சீதபற்பநல்லூர், சமத்துவபுரம், கருவந்தா, சுப்பிரமணியபுரம், உகந்தான்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் கொடுத்த மனுவில், உகந்தான் பட்டியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே ஒரு டாஸ்மாக் மதுபான கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அங்கு வருகிற 27–ந் தேதி கடை திறக்கப்படுகிறது. பள்ளிக்கூடம் அருகே மதுகடைக்களை திறக்கக் கூடாது. அங்கு கடை வைக்க கொடுக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

பாளையங்கோட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த பொது மக்கள் கொடுத்த ஒரு மனுவில், எங்கள் நகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு புதிதாக மது கடை திறந்தால் சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே புதிதாக கடை திறக்க அனுமதி வழங்க கூடாது என்று கூறி இருந்தனர்.

நெல்லையை அடுத்த கரையிருப்பை சேர்ந்த கிராம மக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் ஊரில் பிரசித்தி பெற்ற வடக்குவாச்செல்வி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அனைத்து சமுதாய மக்களும் வழிபட்டு வருகிறார்கள். திருவிழாவின் போது அனைத்து நிகழ்ச்சிகளும் கோவிலுக்கு முன்பு உள்ள அரசு நிலத்தில்தான் நடைபெறும். தற்போது அந்த நிலத்தை சுற்றி முள்வேலி அமைத்து வருகிறார்கள். அந்த நிலத்தை கோவில் திருவிழாவுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

விவசாயிகள் மனு

நெல்லை மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், மானூர் அருகே உள்ள கீழபிள்ளையார் குளத்தை சேர்ந்த விவசாயி வேம்பு கிருஷ்ணன், வங்கி நெருக்கடி கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்துக்கு வங்கி நிர்வாகம் சார்பில் ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

கடையநல்லூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “கடையநல்லூர் தாலுகா பகுதியில் 79 பேருக்கு இலவச மனைபட்டா வழங்கப்பட்டது. தற்போது அந்த நிலம் ஒரு சிலரது தூண்டுதலின் பேரில் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளது. எங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அதே நிலத்தை திரும்பி தர வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

பா.ஜனதா மனு

பாரதீய ஜனதா கட்சி நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன் தலைமையில் கிழக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர், விவசாய சங்க மாநில பொது செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட பொது செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “செங்கோட்டையை சேர்ந்த ஒரு சில காவல்துறை அதிகாரிகள் இந்து இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில அதிகாரிகள் அங்குள்ளவர்களிடம் சேர்ந்து கொண்டு சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கொடி கம்பத்தை ஊன்றி தேசிய கொடியை ஏற்ற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்