ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் கைது

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2017-03-21 04:15 IST

ஊட்டி,

ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் தமிழகம் முழுவதும் கடந்த 14–ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 7–வது நாளான நேற்று தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை முன்னிட்டு ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றதால், மனு கொடுக்க வந்த பொதுமக்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.

100 பேர் கைது

பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த போதிலும் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் புகுந்தனர். பின்னர் அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமன் தலைமை தாங்கி பேசியதாவது:–

பதவி உயர்வு பெற்ற ஒன்றிய பொறியாளர்கள், உதவிபொறியாளர்களுக்கு சமவேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்