கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை-டிரைவர் பலி கணவன்-மனைவி உள்பட3 பேர் படுகாயம்

மகளின் திருமண வரவேற்பில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பியபோது கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை, டிரைவர் பலியானார்கள். கணவன், மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2017-03-20 22:45 GMT
பொறையாறு,


நாகை மாவட்டம், நீலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (வயது 58). இவர் குருக்கத்தி கிராமத்தில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவருடைய மனைவி உஷாசெல்வி (55). இவர், கீழ்வேளூரில் உள்ள பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளியில் விடுதி காப்பாளராக உள்ளார். இவர்கள், தனது மூத்த மகள் ஜனனி (29), பேத்தி 2½ மாத குழந்தையான ரித்திலிகா ஆகியோருடன் ஒரு காரில் சென்னையில் நடைபெற்ற திருஞானசம்பந்தத்தின் இளைய மகள் அபிநயாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் நேற்று முன்தினம் காலை அங்கிருந்து புறப்பட்டு நீலாப்பாடி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர். காரை நீலாப்பாடி அருகே மேலஉதயத்தூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் (36) என்பவர் ஓட்டினார். நேற்று முன்தினம் மாலை பொறையாறு அருகே கீழமேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது காரைக்காலில் இருந்து தரங்கம்பாடி நோக்கி வேகமாக சென்ற மற்றொரு காரும், திருஞானசம்பந்தத்தின் காரும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் திருஞானசம்பந்தத்தின் கார் பலத்த சேதம் அடைந்து அந்த பகுதியில் இருந்த வாய்க்காலில் பாய்ந்தது.

குழந்தை-டிரைவர் பலி

இந்த விபத்தில் திருஞானசம்பந்தம், அவருடைய மனைவி உஷாசெல்வி, மகள் ஜனனி, பேத்தி ரித்திலிகா, டிரைவர் நாகராஜன் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காரில் இருந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ரித்திலிகா, டிரைவர் நாகராஜன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மேலும், திருஞானசம்பந்தம், உஷாசெல்வி, ஜனனி ஆகிய 3 பேரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றொரு காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொறையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுதேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் குழந்தையும், டிரைவரும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்