கும்பகோணத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நூதன போராட்டம்

கும்பகோணத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலையில் முக்காடு அணிந்து கோஷங்கள் எழுப்பினர்.

Update: 2017-03-20 22:45 GMT
கும்பகோணம்,

தமிழ்நாடு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பண பலன்கள் கடந்த சில மாதங்களாக வழங்கப்படவில்லை. இதை கண்டித்து ஓய்வு பெற்றோர் நலச்சங்க கூட்டமைப்பினர் கும்பகோணத்தில் கடந்த வாரம் 3 நாட்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மண் சட்டி ஏந்தியும், ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த நிலையில் நேற்று மீண்டும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நூதன போராட்டத்தில் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர். இதில் ஓய்வு பெற்றோர் நல சங்க கூட்டமைப்பினர் தலையில் முக்காடு அணிந்து தரையில் படுத்து உருண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் குறித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் கூறியதாவது:-

தொடர் போராட்டம்

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காதது கண்டிக்கத்தக்கது. அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது ஓய்வூதிய தொகையை வங்கி கணக்கில் வரவு வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் ஓய்வூதியம் வரவு வைக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்