தேனி அருகே ஓட்டல் ஊழியரை கொலை செய்த நண்பன் கைது

தேனி அருகே ஓட்டல் ஊழியரை கொலை செய்த அவருடைய நண்பனை போலீசார் கைது செய்தனர். அவர் கொலைக்கான காரணம் குறித்த பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2017-03-20 21:30 GMT

தேனி

தேனி அருகே உள்ள கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரையா. இவருடைய மகன் விஷ்ணுபாண்டி என்ற சதாம்உசேன் (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கடந்த 18–ந்தேதி இவர், அதே ஊரில் உள்ள தனது பாட்டி பாப்பம்மாள் என்பவரின் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.

நேற்று முன்தினம் காலையில் அதே வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார். அவருடைய தலையிலும், கழுத்திலும் பலத்த காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் சதாம்உசேன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தலையில் கல்லால் தாக்கியும், கழுத்தில் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

நண்பன் கைது

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் அதே ஊரில் உள்ள நந்தகோபால் தெருவை சேர்ந்த கோபி மகன் முத்துச்செல்வம் (18) என்பவர் கோட்டூர் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமாரி முன்பு நேற்று சரண் அடைந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று முத்துச்செல்வத்தை வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில், சதாம்உசேனை கொலை செய்தை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து முத்துச்செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ‘நானும், சதாம் உசேனும் நண்பர்கள். அவர் சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். அதில் மாட்டிக் கொண்டால் எனது பெயரையும் சொல்லிவிடுவேன் என்று என்னிடம் கூறி வந்தார். ஏற்கனவே சில திருட்டு சம்பவங்களில் அவர் போலீசில் சிக்கிய போது எனது பெயரையும் சொல்லிவிட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று எங்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த நான், அவர் மீது ஹாலோபிளாக் கல்லை தூக்கி எறிந்தேன். பின்னர் அரிவாளால் அவரின் கழுத்தில் வெட்டினேன். இதில் அவர் இறந்து விட்டார். போலீசார் என்னை தேடுவதை அறிந்து சரண் அடைந்து விட்டேன்’ என்று கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட முத்துச்செல்வத்தை, தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை மதுரை மேலூர் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்