தேக்கடி ஏரிக்கு கார், ஆட்டோ செல்ல அனுமதி மறுப்பு: வனத்துறையினரை கண்டித்து சாலைமறியல்

தேக்கடிக்கு கார், ஆட்டோக்கள் செல்ல அனுமதி மறுத்த வனத்துறையினரை கண்டித்து சாலை மறியல் நடந்தது.

Update: 2017-03-20 21:15 GMT

குமுளி

குமுளியை அடுத்து அமைந்துள்ளது தேக்கடி ஏரி. இங்கு படகு சவாரி செய்ய கேரள மாநிலம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் தேக்கடி ஏரியில் டிக்கெட் கவுன்ட்டர் வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 1–ந் தேதி முதல் குமுளி டவுன் அருகே உள்ள ஆனவச்சால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாகன காப்பகம் வரையே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. அங்கிருந்து தேக்கடி ஏரிக்கு செல்ல சுமார் 4 கிலோ தூரம் ஆகும். இங்கு செல்வதற்கு வனத்துறை சார்பில் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒருவருக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் தேக்கடி ஏரிக்கு செல்ல கார் மற்றும் ஆட்டோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் டிரைவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கார், ஆட்டோக்கள் தேக்கடி ஏரி வரை செல்ல அனுமதிக்கக்கோரி கார், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் குமுளி– கோட்டயம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தேக்கடி ஏரிக்கு செல்ல அனுமதி மறுத்த வனத்துறையினரை கண்டித்து கோ‌ஷங்களையும் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குமுளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினை குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்