சத்திரக்குளத்தை தூர்வாரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி காந்தியவாதி போராட்டம்

கொடும்பாளூர் சத்திரக்குளத்தை தூர்வாரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி, காந்தியவாதி செல்வராஜ் போராட்டம் நடத்தினார். மேலும் இந்த கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்வேன் எனவும் அவர் கூறினார்.

Update: 2017-03-20 23:00 GMT
விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). காந்தியவாதியான இவர் பொதுப்பிரச்சினைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் சைக்கிள் பயணம், நடைபயணம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் கொடும்பாளூரில் உள்ள சத்திரக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும், இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் நேற்று காலை 10.30 மணி அளவில் கொடும்பாளூரில் உள்ள செல்போன் கோபுரத்தின் பாதி உயரத்தில் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

கீழே இறங்க மறுப்பு

இதைக்கண்ட பொதுமக்கள் விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செழியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசைவாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் காந்தியவாதி செல்வராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் காந்தியவாதி செல்வராஜ் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்க மறுத்து விட்டார்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து போலீசார் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு இலுப்பூர் தீயணைப்பு படைவீரர்கள் வந்தனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு காந்தியவாதி செல்வராஜ், செல்போன் கோபுரத்தில் இருந்து காலை 11.30 மணி அளவில் கீழே இறங்கினார். இதைத்தொடர்ந்து விராலிமலை போலீசார் காந்தியவாதி செல்வராஜை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொடும்பாளூர் சத்திரக்குளத்தை தூர்வாரக்கோரி காந்தியவாதி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை செய்வேன்

முன்னதாக காந்தியவாதி செல்வராஜ் நிருபர்களிடம் கூறுகையில், “சத்திரக்குளத்தை தூர்வாரி பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக விட வேண்டும். மேலும் குளத்தை சுற்றி வேலி மற்றும் மரக்கன்றுகள் நட்டு பசுமையாக மாற்ற வேண்டும்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்” என்றார். 

மேலும் செய்திகள்