குடியிருப்பு பகுதியில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

குடியிருப்பு பகுதியில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜிடம் மனு கொடுத்தனர்.

Update: 2017-03-20 22:45 GMT
கரூர்,


கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் தாந்தோன்றிமலை, ஜே.ஜே.நகர், ஜீவா நகர், அசோக்நகர், திருமலைநகர், நிலாநகர், சிவாஜிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றாக வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஏராளமானவர்கள் வசித்து வருகிறோம். இந்த நிலையில் தாந்தோன்றிமலை பஸ் நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை மேற்கண்ட குடியிருப்பு பகுதிக்கு மாற்றுவதாக தெரிகிறது. குடியிருப்பு பகுதிக்கு அரசு மதுபான கடையை மாற்றினால் இந்த பகுதியில் வசிக்கும் அனைத்து தரப்பினரும் மிகவும் சிரமப்படும் நிலை ஏற்படும். எனவே குடியிருப்பு பகுதியில் அரசு மதுபான கடை அமைக்க கூடாது. இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

மதுபான கடை

இதேபோன்று மலையம் பாளையம் பகுதி பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. மலையம்பாளையத்தில் மதுபான கடை அமைந்தால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். எனவே மலையம்பாளையம் பகுதியில் மதுபான கடை அமைப்பதை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

புலியூர், அமராவதிநகர், செல்வம்நகர் ஆகிய பகுதி பொதுமக்களும் அந்த பகுதியில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.

குடிநீர்

மேலப்பாளையம், சணப்பிரட்டி, நத்தமேடு ஆகிய பகுதி பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், மேற்கண்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் 15 நாட்களுக்கு மேல் குடிநீர் வரவில்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பள்ளப்பாளையம் பகுதி பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி மனு கொடுத்தனர். இதேபோன்று ஏராளமானவர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

மேலும் செய்திகள்