மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி கலெக்டர் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தேனி
தேனி அருகே உள்ள பூமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 300–க்கும் மேற்பட்டோர், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக நேற்று வந்தனர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடையை அகற்றக்கோரியும், புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், சப்–இன்ஸ்பெக்டர் உதயக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலெக்டர் வெங்கடாசலத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
மதுபான கடைஎங்கள் ஊரில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மல்லையகவுண்டன்பட்டி சாலையில் ஒரு மதுபான கடை அமைந்து உள்ளது. தற்போது பூமலைக்குண்டு–காமாட்சிபுரம் சாலையில் பி.டி.ஆர். வாய்க்கால் கரை அருகில் புதிதாக ஒரு மதுபானக்கடை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்த மதுபான கடைகளால் பள்ளி செல்லும் மாணவ–மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துபவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளையும், மதுபான பாட்டில்களையும் ஆங்காங்கே விவசாய நிலங்களில் போட்டுச் செல்கின்றனர். இந்தசூழ்நிலையில் மேலும் ஒரு கடை அமையுமானால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே, ஏற்கனவே உள்ள மதுபான கடையையும், புதிதாக அமைக்க உள்ள மதுபான கடையையும் வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
நவீன எரிவாயு தகனமேடைஇதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுக்களில், ‘பெரியகுளத்தில் ரூ.50 லட்சம் செலவில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதனை உடனே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தேனி அருகே சுக்குவாடன்பட்டி இந்திரா காலனியில் வசிக்கும் மக்களுக்கு பாதை வசதி, குடிநீர் வசதி, பெண்களுக்கான கழிப்பிடத்துக்கு தண்ணீர் வசதி, குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
வனவேங்கை பேரவை அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இரணியன், மாவட்ட தலைவர் தங்கபாண்டியன் மற்றும் நிர்வாகிகள், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘தேனி அல்லிநகரம் 14–வது வார்டில் வள்ளிநகர், கம்போஸ்ட் ஓடைத்தெரு போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுகின்றனர். இங்கு பெண்கள் கழிப்பிட வசதி, தெருவிளக்குகள், குடிநீர் தொட்டி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
கரகம் எடுக்கும் கிணறுஆண்டிப்பட்டி அருகே எரதிமக்காள்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கலெக்ரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் வைக்கும் திருவிழா கொண்டாடுவோம். அப்போது ஊரில் உள்ள ஒரு கிணற்றில் கரகம் எடுப்பது வழக்கம். முளைப்பாரி எடுத்து வந்து அதனை இந்த கிணற்றில் போட்டு வந்தோம்.
தற்போது இந்த கிணற்றை பயன்படுத்தக்கூடாது என்று அதன் உரிமையாளர் கூறுகிறார். ஒவ்வொரு ஆண்டும் திருவிழா முடிந்தவுடன் கிணற்றில் போடப்பட்ட முளைப்பாரியை அள்ளி, கிணற்றை மக்களே தூர்வாரி கொடுப்போம். சுமார் 200 ஆண்டுகளாக நடந்து வரும் வழிபாடு என்பதால் எங்களுக்கு அந்த கிணற்றை பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறி இருந்தனர். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.