நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்கள் இணைந்து பணியாற்றுவோம் திருச்சியில் விஷால் பேட்டி

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் எங்கள் அணி வெற்றி பெற்றால் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்கள் இணைந்து பணியாற்றுவோம் என்று விஷால் கூறினார்.

Update: 2017-03-20 22:45 GMT
திருச்சி,

சென்னையில் வருகிற (ஏப்ரல்) 2-ந்தேதி திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தலைவர் பதவிக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் போட்டியிடுகிறார். இந்த அணி சார்பில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குனர்கள் மிஷ்கின், பாண்டிராஜ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கெட்டப் ராஜேந்திரன், எஸ்.ஆர்.பிரபு, வி.சி.கணேசன் ஆகியோர் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக நேற்று திருச்சி வந்தனர்.

விஷால் பேட்டி

பின்னர் திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது விஷால் கூறியதாவது:-

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,212. இதில் திருச்சி பகுதியில் திரைப்பட தயாரிப்பாளர்கள் 10 பேர் தான் உள்ளனர். அவர்களை நாங்கள் தேடி வந்து, ஆதரவு கேட்டு இருக்கிறோம். இதேபோல் சேலம், கோவை, கரூர், திருப்பூர் மாவட்டங்களிலும் ஆதரவு திரட்டி இருக்கிறோம். சென்னையில் பல பிரபல படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் தற்போது மிகவும் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களது பிரச்சினையை இதுவரை இருந்த தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் அணி வெற்றி பெற்றால் வறுமையில் வாடும் தயாரிப்பாளர்களை மீண்டும் பட தயாரிப்பாளர்களாக மாற்றி காட்டுவோம். எங்கள் அணியில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என 3 பேருமே இருக்கிறார்கள். இந்த அணி ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றால் நாங்கள் தயாரிப்பாளர்களது பிரச்சினைகளை தீர்க்க இணைந்து பணியாற்றுவோம். நாங்கள் யாரையும் மிரட்ட மாட்டோம். படங்கள் வெளியிடுவதில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து இயக்குனர் மிஷ்கின், இசையமைப்பாளர் இளையராஜா- பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக கூறுகையில், “இசையில் இருந்து தான் பாடல் பிறக்கிறது. இசை இல்லாமல் பாடல் இல்லை. எனவே இளையராஜா தனது இசைக்கு காப்புரிமை கேட்பதில் தவறு இல்லை. அவரை நான் பாராட்டுகிறேன்” என கூறினார்.

மேலும் செய்திகள்