100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

உப்பிலியபுரம் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-03-20 22:45 GMT
உப்பிலியபுரம்,


திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அவர்களுக்கு வேலை வழங்காமல் நிறுத்தப்பட்டது. மேலும் கடந்த 4 மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

இதனால் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் நேற்று காலை திடீரென வெங்கடாசலபுரம் மாரியம்மன் கோவில் முன்பு துறையூர்- தம்மம்பட்டி சாலையில் மண்வெட்டி உள்ளிட்டவற்றுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பொது மக்கள் மற்றும் சில கட்சியினரும் அமர்ந்திருந்த னர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த துறையூர் துணை தாசில்தார் வனஜா, உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் பாலாஜி, துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார், வருவாய் ஆய்வாளர் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர் ரவி ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள், இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்படும். அரசிடம் இருந்து நிதி வந்தவுடன் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று கூறினார்கள். இதையடுத்து தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்