நடிகர் தனுஷின் உடலில் இருந்த மச்சம் ‘லேசர்’ சிகிச்சை மூலம் அகற்றம் டாக்டர்கள் அறிக்கையில் தகவல்

நடிகர் தனுஷின் உடலில் இருந்த மச்சத்தை லேசர் சிகிச்சை மூலம் அகற்றியுள்ளதாக

Update: 2017-03-20 23:00 GMT

மதுரை,

மேலூர் தம்பதி வழக்கு

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்–மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால் பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை, எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இதற்கு மேலூர் தம்பதியர் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், தனுஷ் தங்கள் மகன் தான் என்று நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன என்று கூறியிருந்தனர்.

தனுஷ் நேரில் ஆஜர்

இந்த வழக்கில் இருதரப்பினரும் தனுஷ் பெயரிலான பள்ளி அசல் சான்றிதழ்களை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் ஏற்கனவே பள்ளி மாற்றுச்சான்றிதழை இருதரப்பினரும் தாக்கல் செய்தனர்.

நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மாற்றுச்சான்றிதழில் அவரது உடலில் உள்ள அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து தனுஷ் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் கடந்த மாதம் 28–ந் தேதி மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் ஆஜரானபோது, அவருடைய உடலில் அங்க மச்ச அடையாளங்களை டாக்டர்கள் குழுவினர் சரிபார்த்தனர்.

இதற்கிடையே தனுஷுக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும் என்று மேலூர் தம்பதி சார்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

நீதிபதி அறையில் விசாரணை

இந்த நிலையில் அந்த வழக்கை நீதிபதி பி.என்.பிரகாஷ் தனி அறையில் நேற்று மாலை விசாரித்தார்.

அப்போது டாக்டர்களின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை 27–ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

டாக்டர்கள் அறிக்கை

இந்த விசாரணைக்குப்பின், மேலூர் தம்பதியினரின் வக்கீல் டைட்டஸ் கூறியதாவது:–

தனுஷ் தொடர்பான வழக்கு நீதிபதியின் தனி அறையில் விசாரிக்கப்பட்டது. அப்போது தனுஷின் அங்கஅடையாளங்களை பரிசோதித்த டாக்டர்களின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் நீதிபதி கேட்டிருந்த 3 கேள்விகளுக்கு டாக்டர்கள் அளித்த பதில் அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டு இருந்தனர்:–

‘‘கடந்த 28–ந் தேதி ஐகோர்ட்டு பதிவாளரின் அறையில் நடிகர் தனுஷின் அங்கஅடையாளங்களை பரிசோதித்தோம். இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டு உள்ளது போல அங்க அடையாளங்கள் உள்ளனவா, ஏதேனும் அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளனவா, வெளியில் தெரியாமல் அவற்றை மறைக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்தும் பார்த்தோம். கதிரேசன் தரப்பினர் கூறி உள்ளது போல வலதுதோள்பட்டையில் எந்த தழும்பும் இல்லை.

மச்சம் அகற்றம்

மச்சத்தை அகற்ற முடியும். ஆனால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முழுமையாக மறைக்க முடியாது.

சிறிய அளவிலான மச்சம் லேசர் சிகிச்சை மூலம் எந்த தடயமும் இல்லாமல் அழிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான மச்சம் அழிக்கப்பட்டதற்கான தடயத்தை தெர்மாஸ்கோப் மூலம் கண்டறிய முடியும். அதற்கான தழும்பை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முழுமையாக அகற்ற முடியாது.’’

இவ்வாறு டாக்டர்கள் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததாக வக்கீல் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்