தீர்த்த பிரசாதத்தில் மயக்கமருந்தை கலந்து கொடுத்து பெண் பக்தர்களிடம் தங்கநகைகளை திருடிய போலி சாமியார் கைது

தீர்த்த பிரசாதத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து, பெண் பக்தர்களிடம் தங்கநகைகளை

Update: 2017-03-20 22:30 GMT

திருமலை,

பெண்களிடம் நகை திருட்டு

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் போலி சாமியார் ஒருவர், பெண்களை ஆன்மிக தலங்களுக்கு அழைத்துச்சென்று, விடுதி அறையில் தூங்கும்போது, பெண்களின் தங்கநகைகளை திருடிச்செல்வதாக இரு மாநில போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. எனவே போலி சாமியாரை பிடிக்க இரு மாநில போலீசாரும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் திருப்பதி ராஜண்ணா பூங்கா பகுதியில் சந்தேகப்படும் படியாக வந்த சாமியார் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை, திருப்பதி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

மயக்க மருந்தை கலந்து கொடுத்து

அவர், கிழக்குக் கோதாவரி மாவட்டம் கண்டேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனு என்பது தெரிய வந்தது. அவருக்கு பல பெண்களுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அறிமுகமானப் பெண்களிடம் அவர், தனக்கு திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீசைலம், மதுரை, காசி ஆகிய ஆன்மிக தலங்களில் பல சாமியார்களுடன் பழக்கம் உள்ளது. அந்தச் சாமியார்களின் உதவியோடு உங்களை மேற்கண்ட ஆன்மிக தலங்களுக்கு குறைந்த கட்டணத்தில் அழைத்துச்செல்கிறேன் எனக்கூறி, பல பெண்களை ஆன்மிக தலங்களுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

ஆன்மிக தலங்களில் சாமி தரிசனம் செய்து விட்டு, இரவில் விடுதி அறைகளில் தங்கும்போது, அதே விடுதியில் சாமியாரும் தங்கி, கோவில்களில் வழங்கிய தீர்த்த பிரசாதத்தை இரவு 10 மணிக்குமேல் தான் குடிக்க வேண்டும் எனக்கூறி, விடுதி அறையில் தங்கியிருக்கும் பெண் பக்தர்களுக்கு இரவு 10 மணிக்குமேல் தீர்த்த பிரசாதத்துடன் மயக்க மருந்தை கலந்து கொடுத்து குடிக்க வைத்துள்ளார். தீர்த்த பிரசாதத்தை குடித்த அவர்கள் சிறிது நேரத்தில் மயக்கமடைந்ததும், அவர்கள் அணிந்திருக்கும் தங்கநகைகளை திருடிச்சென்றுள்ளார். இவ்வாறாக ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏராளமான பெண்களிடம் நகைத்திருட்டில் ஈடுபட்டு வந்ததும், அவர் போலி சாமியார் என்றும் தெரிய வந்தது.

திருப்பதியில் கைது

அவர் மீது ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பல போலீஸ் நிலையங்களில் 12 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்