சேலத்தில் பரபரப்பு: போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் நாமக்கல் முதியவர் தீக்குளிக்க முயற்சி சொத்தை அபகரிக்க உறவினர்கள் முயற்சிப்பதாக புகார்

சேலத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் நேற்று நாமக்கல்லை சேர்ந்த;

Update: 2017-03-20 23:15 GMT

சேலம்,

புதிய டி.ஐ.ஜி. அலுவலகம்

சேலம் பெரமனூர் ரோட்டில் தனியார் பள்ளி அருகில் வாடகை கட்டிடத்தில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகம் செயல்பட்டு வந்தது. இங்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், டி.ஐ.ஜி.யை சந்திப்பதற்காகவும், பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மனு கொடுக்கவும் வருவார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. பின்னர், கலெக்டர் பங்களா பின்புறம் உள்ள ஆத்துக்காட்டில் காலியிடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு புதிய டி.ஐ.ஜி. அலுவலகம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில், கடந்த 7–ந் தேதி சேலத்திற்கு வந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது, புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சேலம் டி.ஐ.ஜி. அலுவலகமும் திறக்கப்பட்டது. அதன்பிறகு வாடகை கட்டிடத்தில் இருந்த அலுவலகம் சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. டி.ஐ.ஜி. நாகராஜன் விடுமுறையில் இருந்ததால் அலுவலகம் பழைய கட்டிடத்திலேயே செயல்பட்டு வந்தது. தற்போது அவர் விடுமுறை முடிந்து பணிக்கு வந்ததையடுத்து நேற்று முதல் புதிய கட்டிடத்தில் டி.ஐ.ஜி. அலுவலகம் செயல்பட தொடங்கியது.

முதியவர் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் மாவட்டம் களங்காணி பெரியகாடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 82). இவர், நேற்று சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலக புதிய கட்டிடத்திற்கு வந்தார். பின்னர் அவர், தன்னுடைய சொத்தை உறவினர்கள் சிலர் அபகரிக்க முயற்சிப்பதாக புகார் கூறி தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்த மண்எண்ணெய் கேனை திறந்து தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை போலீசார் டி.ஐ.ஜி.யிடம் மனு கொடுக்க அழைத்துச் சென்றனர்.

அப்போது, கந்தசாமியிடம் புகார் மனுவை வாங்கிய டி.ஐ.ஜி. நாகராஜன், இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து கந்தசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகம் புதிய கட்டிடத்தில் செயல்பட தொடங்கிய முதல்நாளிலேயே முதியவர் மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்