மரகதலிங்கம் கடத்தல்: கைதான 5 பேரும் சேலம் சிறையில் அடைப்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு வழக்கு மாற்றப்படுகிறது
தாரமங்கலம் அருகே மரகதலிங்கம் கடத்தல் வழக்கில் கைதான பெண் உள்பட 5 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.;
தாரமங்கலம்,
சேலம் மாவட்டம் தாரமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அழகுசமுத்திரம் பகுதியில் சொகுசு காரில் பழமைவாய்ந்த மரகதலிங்க சிலையை கடத்தி சென்ற கும்பலை தாரமங்கலம் போலீசாரும், சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் சேர்ந்து நேற்று முன்தினம் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலை கடத்தல் கும்பலான, சேலம் இரும்பாலை அருகே உள்ள பால்பண்ணை பெருமாள் கோவில் அடிவாரம் பகுதியை சேர்ந்த ராஜா என்கிற சாமுவேல் என்பவருடைய மனைவி வள்ளி என்கிற மேரி (வயது 49), பழனிசாமி மகன் சீனிவாசன்(32), மாரியப்பன்(47), கோபால் மகன் குமரேசன்(28), ராஜேந்திரன் மகன் சரவணன்(27) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் விசாரணையில், அந்த கும்பல் மரகதலிங்கத்தை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் இருந்து கடத்தி கொண்டு வந்ததும், இந்த மரகதலிங்கத்தை அவர்கள் சேலத்தில் இருந்து கோவை விமான நிலையம் மூலம் வெளிநாட்டிற்கு கடத்தி செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது. கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட மரகதலிங்கம் சுமார் அரை அடி உயரம் கொண்டது. இதன் எடை 7 கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ.25 கோடி இருக்கும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
சிறையில் அடைப்புஇதனிடையே கைது செய்யப்பட்ட 5 பேரையும் சேலம் 6–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாரமங்கலம் போலீசார் நேற்று காலை ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில் வள்ளி, சேலம் பெண்கள் கிளை சிறையிலும், மற்ற 4 பேரும் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
தாரமங்கலம் போலீசார் பதிவு செய்துள்ள இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு விரைவில் மாற்றப்பட உள்ளது. அதன்பிறகே இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே கைதான வள்ளியின் மகள் அஸ்வினி போலீசார் மீது அதிரடியாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், போலீசார் கூறுவது போன்று இது அபூர்வ மரகதலிங்கம் இல்லை. மாறாக இயற்கையான சாதாரண வகை கொண்ட பச்சை நிற கல் தான் என்று குறிப்பிட்டார்.
தொன்மையை கண்டறியஇதுபோன்ற சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் பறிமுதல் செய்யப்பட்ட மரகதலிங்கத்தை முதலில் சென்னைக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எடுத்து செல்ல திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இந்த சிலையின் தொன்மையை கண்டறிந்திடும் வகையில், தொல்லியல் ஆய்வாளர்கள் சோதனை செய்திட வசதியாக தற்போது தாரமங்கலம் போலீஸ் நிலையத்திலேயே இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த சிலையை பரிசோதிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.