பஸ் மோதி விபத்து மொபட்டில் சென்ற கார் டிரைவர் பலி படுகாயமடைந்த பிளஸ்–1 மாணவர் மருத்துவமனையில் அனுமதி

பஸ் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற கார் டிரைவர் பலியானார்.;

Update: 2017-03-20 22:45 GMT

நெல்லிக்குப்பம்,

விபத்தில் பலி

விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் ஸ்ரீதர்(வயது 23). கார் டிரைவர். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த துரைராஜ் மகன் ஸ்ரீதர்(16) என்பவரும் நேற்று காலையில் மொபட்டில் பண்ருட்டிக்கு வந்தனர். அங்குள்ள ஒரு கடையில் காருக்கு தேவையான உதிரிபாகங்களை வாங்கிக்கொண்டு, அதே மொபட்டில் கோலியனூருக்கு புறப்பட்டனர்.

கும்பகோணம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கண்டரக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே சென்னையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த அரசு பஸ், இவர்களது மொபட் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. முன்பகுதியும் சேதமடைந்தது. மொபட்டின் முன்பக்க பகுதி முற்றிலுமாக நொறுங்கியது. இந்த விபத்தில் கார் டிரைவரான ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பிளஸ்–1 மாணவர் காயம்

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்து உயிருக்காக போராடிக்கொண்டிருந்த மாணவர் ஸ்ரீதரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவர் ஸ்ரீதர், புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்த மாணவர் ஸ்ரீதர், கோலியனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்