திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் காத்திருப்பு போராட்டம் தொடர் வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-20 23:00 GMT

திருவண்ணாமலை,

வேலை நிறுத்தம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 14–ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘‘உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், கணினி இயக்குபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு பட்டியல் வரம்பை உயர்த்த வேண்டும்’’ என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.

முதல் 2 நாட்கள் அவர்கள் அலுவலக பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள். 16–ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் 17–ந் தேதி திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே மறியலில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

இதனிடையே நேற்று முன்தினம் திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 20, 21–ந் ஆகிய தேதிகளில் தமிழக மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திலும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதையொட்டி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து காலை 10 மணி முதல் கலெக்டர் அலுவலகத்துக்கு வரத்தொடங்கினார்கள். பின்னர் கலெக்டர் அலுவலகம் அருகே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை குறித்து சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பேசினார்கள்.

அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு, விடிய, விடிய போராட்டத்தை தொடரப்போவதாக சங்க நிர்வாகி ஒருவர் கூறினார். போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

பணிகள் பாதிப்பு

ஊரக வளர்ச்சித்துறையினர் அலுவலர்கள் சங்கத்தினரின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகம் ஆகியவை ஊழியர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கணினி ஆபரேட்டர் ஆகியோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் 100 நாள் வேலை திட்டப்பணிகளும் நடைபெறாததோடு இந்த துறைகளின் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மாலை ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்