டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அரசு பஸ்சை சிறைப்பிடித்து மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல் கண்ணமங்கலத்தில் பரபரப்பு

கண்ணமங்கலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அரசு பஸ்சை சிறைப்பிடித்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-20 23:00 GMT

கண்ணமங்கலம்,

டாஸ்மாக்கடை

கண்ணமங்கலத்தை அடுத்த அமிர்தி அருகே வேடகொல்லைமேடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி அருகே டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த வழியாகத்தான் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். டாஸ்மாக் கடையில் மது அருந்துபவர்கள் இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ–மாணவிகளிடமும் பெண்களிடமும் தகராறில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. மேலும் விடுமுறை நாட்களில் அமிர்தி பூங்காவுக்கு வரும் போதை ஆசாமிகள் இந்த டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலை வாங்கிக்கொண்டு பள்ளி வளாகம் மற்றும் அருகேயுள்ள விளை நிலங்களில் அமர்ந்து மதுவை அருந்துகின்றனர். பின்னர் பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து விட்டு செல்வதாவும் புகார்கள் வந்தன. அவ்வாறு பள்ளிவளாகத்தில் மதுபாட்டில்களை உடைத்து போடுவதால் அந்த பகுதிக்கு செல்லும் மாணவர்களின் கால்களில் கண்ணாடிகள் குத்தி காயம் ஏற்படுகிறது.

மேலும் டாஸ்மாக் கடையின் எதிரே குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி ஒன்று உள்ளது. மது குடிப்பவர்கள் போதை தலைக்கேறிய நிலையில் இங்கு தண்ணீர் பிடிக்க வரும் பெண்களை கிண்டல் செய்வதால், தண்ணீர் எடுக்க செல்லவே பெண்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டது. எனவே வேடகொல்லைமேடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடமும், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். ஆனால் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் நாளுக்கு நாள் டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு மாணவர்களிடம், பெண்களிடம் தகராறில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

அரசு பஸ்சை சிறைபிடிப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த வேடகொல்லைமேடு கிராம மக்கள் நேற்று காலை 9.30 மணியளவில் வேலூரில் இருந்து ஜமுனாமரத்தூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்கள் பஸ்சின் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த பள்ளி மாணவர்களும் அங்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அனைவரும் கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியல் நடந்தது. அரசு அதிகாரிகள் யாரும் கிராமமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வரவில்லை. இதனால் வேலூர்–அமிர்தி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் சிறைபிடிக்கப்பட்ட பஸ்சும் அங்கிருந்து செல்ல முடியாததால் அதிலிருந்த பயணிகள் பஸ்சை விடுவிக்கக்கோரி போராட்டக்காரர்களிடம் கேட்டனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் தாங்கள் சிறைபிடித்து வைத்திருந்த அரசு பஸ்சை விடுவித்து சாலை மறியலை கைவிட்டனர்.

இந்த நிலையில் தங்கள் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் விரைவில் கிராம மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்