இந்தியாவிலேயே முதன்முறையாக புதுவை கடற்கரையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம்

இந்தியாவிலேயே முதன்முறையாக புதுவை கடற்கரையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நாராயணசாமி பேட்டி

Update: 2017-03-19 23:15 GMT

புதுச்சேரி

இந்தியாவிலேயே முதன்முறையாக புதுவை கடற்கரையில் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

டெல்லி பயணத்தின் போது புதுவை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்காக சென்னை துறைமுகம் புதுவை அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. விசாகப்பட்டினம் முதல் சென்னை வரை தொழிற்பேட்டை மையம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதை புதுச்சேரி வரை நீட்டிக்க மத்திய மந்திரியிடம் வலியுறுத்தி உள்ளோம். அதற்கு சாதகமான பதிலை தந்துள்ளனர்.

கூடுதல் மின்சாரம்

விமான போக்குவரத்து துறை மந்திரி கஜபதிராஜூவையும் சந்தித்துப் பேசினோம். முதல் கட்டமாக புதுவையில் இருந்து சேலம் வழியாக பெங்களூருவுக்கும், புதுவையில் இருந்து திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கும் விமானங்களை இயக்க தனியார் விமான நிறுவனத்தினர் முன்வந்துள்ளனர். அடுத்தகட்டமாக புதுச்சேரியில் இருந்து கேரளாவுக்கும், திருச்சி வழியாக பெங்களூருவுக்கும் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் மத்திய மின்துறை மந்திரி பியூஸ்கோயலையும் சந்தித்துப் பேசினேன். ஒடிசா மாநில மத்திய தொகுப்பில் இருந்து புதுவைக்கு கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் வழங்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன். அந்த மின்சாரம் கிடைக்கும்போது தொழிற்சாலைகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கலாம். கூடுதலாக தொழிற்சாலைகளையும் தொடங்கலாம்.

சூரிய ஒளிமூலம் மின்சாரம்

ஜெர்மன் நாட்டினைப்போல் புதுவை கடற்கரை பகுதியில் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் முழு நிதியையும் வழங்க உள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த திட்டம் புதுவையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 2 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம்.

புதுவை மாநிலத்தில் திட்டமில்லா செலவினத்துக்கு கூடுதல் நிதி வழங்கவேண்டும் என்று ஏற்கனவே மத்திய நிதி மந்திரியிடம் வலியுறுத்தி உள்ளேன். 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தியதால் இதுவரை ரூ.250 கோடி கூடுதலாக செலவாகியுள்ளது. மேலும் நிலுவைத்தொகை வழங்க ரூ.250 கோடி தேவைப்படுகிறது. அதையும் கேட்டுள்ளோம்.

திட்டமில்லா செலவினத்துக்காக 2016–17, 2017–18 நிதியாண்டுக்கு கூடுதலாக தலா ரூ.500 கோடி வழங்குமாறு கேட்டுள்ளேன். இதுகுறித்து தற்போதும் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன்.

3 பேர் பலியான விவகாரம்

கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரியில் டயாலிசிஸ் செய்தபோது 3 பேர் மரணம் அடைந்தது தொடர்பாக விசாரணைக்குழு விசாரித்து வருகிறது. அதற்கான சில நடைமுறைகளுக்காக டயாலிசிஸ் பிரிவு தற்போது செயல்படவில்லை. விரைவில் அந்த பிரிவை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுவை துறைமுக முகத்துவாரத்தில் தற்போதுவரை 1½ லட்சம் கியுபிக் மீட்டர் மணல் தூர்வாரப்பட்டுள்ளது. இன்னும் 2½ லட்சம் கியுபிக் மீட்டர் தூர்வார வேண்டியுள்ளது.

தமிழகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணியான தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வோம். இதற்காக நானும், அமைச்சர்களும் அங்கு சென்று பிரசாரத்தில் ஈடுபடுவோம். எங்கள் கூட்டணி வேட்பாளர் வெற்றிபெறுவது உறுதி.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

ஏற்றுமதி, இறக்குமதி பணி தொடங்கும் போது அரசுக்கு ரூ.400 கோடி வருவாய் கிடைக்கும்

புதுவை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்வது தொடர்பாக முதல்– அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:–

சென்னை துறைமுகம், புதுச்சேரி அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் மூலம் புதுவை துறைமுகத்தில் முதலில் 4 லட்சம் மெட்ரிக் டன்னும், அதன்பிறகு 10 லட்சம் மெட்ரிக் டன்னும் சரக்குகள் கையாளப்படும். இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும்போது புதுச்சேரி அரசுக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி வரை வருமானம் கிடைக்கும். 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

கப்பல் போக்குவரத்துக்காக புதுவை முகத்துவாரத்தில் முதல் வருடம் மணல்வாரும் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று புதுவை அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட சென்னை துறைமுகம் தற்போது தூர்வாரும் பணியை தொடங்கி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி புதுவை துறைமுகம் சென்னை துறைமுகத்தின் துணை துறைமுகமாக செயல்படும். இங்கு இருந்து ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் நடைபெற உள்ளது.

இதற்காக நாக்பூரை தலைமையமாக கொண்ட நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதி மையம் புதுச்சேரியில் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக வருகிற 4, 5 தேதிகளில் டெல்லியில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நானும், அமைச்சர் கந்தசாமியும் கலந்துகொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்