ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடன் தள்ளுபடி நடவடிக்கையால் வேளாண் துறை முதலீடு புத்துயிர் பெற்றது சரத்பவார் சொல்கிறார்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் விவசாய கடன் தள்ளுபடி நடவடிக்கையால் தான் வேளாண் துறை முதலீடு புத்துயிர் பெற்றது என்று சரத்பவார் தெரிவித்தார்.
புனே,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் விவசாய கடன் தள்ளுபடி நடவடிக்கையால் தான் வேளாண் துறை முதலீடு புத்துயிர் பெற்றது என்று சரத்பவார் தெரிவித்தார்.
சட்டசபை கூட்டத்தொடர்மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 6–ந் தேதி முதல் நடந்து வருகிறது. விவசாய கடன்களை அரசு தள்ளுபடி செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. இவர்களுடன் ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனாவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டத்தால் சட்டசபை அலுவல்கள் முடங்கின.
இருப்பினும் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விவசாய கடனை தள்ளுபடி செய்ய மறுத்து விட்டார். பட்ஜெட்டிலும் விவசாய கடன் தள்ளுபடி குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
துணிச்சலான முடிவுஇந்த நிலையில் புனேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் பேசியதாவது:–
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, நான் மத்திய வேளாண் துறை மந்திரியாக பதவி வகித்தேன். அப்போது அரசுக்கு இழப்பு ஏற்பட்டாலும், ரூ. 70 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வது என்று துணிச்சலுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி முடிவு செய்தது.
அந்த முடிவின் பலனாக முடங்கிக்கிடந்த வேளாண் துறை முதலீடு புத்துயிர் பெற்றது. வேளாண் முதலீடுகள் பலமடங்கு அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக கிடைந்த அதிகப்படியான வேளாண் உற்பத்தியின் காரணமாக இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரித்தது.
இவ்வாறு சரத்பவார் கூறினார்.