கணவருடன் ஏற்பட்ட சண்டையில் பயங்கரம் 15–வது மாடியில் இருந்து மகன், மகளை கீழே வீசி தாய் தற்கொலை மகள் பலி; மகன் உயிர் பிழைத்த அதிசயம்

கணவருடன் ஏற்பட்ட சண்டையில் 15–வது மாடியில் இருந்து மகன், மகளை வீசி தாய் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதில், அவரது மகள் பலியானாள். மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

Update: 2017-03-19 21:55 GMT

தானே,

கணவருடன் ஏற்பட்ட சண்டையில் 15–வது மாடியில் இருந்து மகன், மகளை வீசி தாய் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதில், அவரது மகள் பலியானாள். மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

கணவன், மனைவி சண்டை

தானே மும்ரா ரசீத் காம்பவுண்ட் பகுதியில் உள்ள ஹில்வியூ கட்டிடத்தில் வசித்து வருபவர் ஹனீப் (வயது30). இவரது மனைவி சிரீன்(27). இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள். மூத்த மகன் தவுபிக்(7), மகள் அம்ரீன்(4). சமீபகாலமாக கணவர், மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

வழக்கம்போல நேற்று காலையும் இருவருக்கும் இடையே சண்டை உண்டானது. இதில் கடும் கோபம் அடைந்த சிரீன் மகன், மகளுடன் வாடகை வீட்டில் குடியேறுவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

மாடியில் இருந்து வீசி மகள் கொலை

பின்னர் மும்ரா சிப்லிநகர் பகுதியில் உள்ள மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் தோஸ்தி அப்பார்ட்மெண்ட் என்ற 15 மாடி கட்டிடத்திற்கு மகன், மகளை அழைத்து கொண்டு சென்றார். அங்கிருந்த காவலாளி சிரீனிடம் விசாரித்தபோது, வாடகைக்கு வீடு பார்க்க வந்ததாக கூறிவிட்டு 15–வது மாடிக்கு சென்றார்.

இதன் பின்னர் அவர் திடீரென பெற்ற மகள் என்றும் பாராமல் அம்ரீனை மாடியில் இருந்து கீழே வீசினார். இதில் சிறுமி படுகாயம் அடைந்து துடிதுடித்து செத்தாள்.

தற்கொலை

தாயின் கொடூர செயலை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த சிறுவன் தவுபிக் அங்கிருந்து தப்பிஓட முயன்றான். ஆனால் கொலைவெறி ஆட்டம் போட்ட சிரீன் அவனையும் விடவில்லை. ஓட முயன்ற அவனையும் பிடித்து வலுக்கட்டாயமாக கீழே வீசினார். பின்னர் தானும் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த கோர சம்பவத்தை நேரில் பார்த்து பதறிப்போன கட்டிட காவலாளி அலறினார். தகவல் அறிந்து வந்த டைகர் போலீசார் படுகாயத்துடன் துடித்துக்கொண்டிருந்த தவுபிக்கை மீட்டு சிகிச்சைக்காக மும்ரா மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜே.ஜே. அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டான். போலீசார் பலியான தாய், மகள் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவன் உயிர் தப்பிய அதிசயம்

15–வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் தவுபிக்கின் 2 கால்களும் உடைந்தன. அவனுக்கு ஜே.ஜே. அரசு மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவன் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவன் உயிர் பிழைத்தது உண்மையிலேயே அதிசயம் என டாக்டர்கள் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹனீப்பிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்