குரங்குகள் விபத்தில் சிக்காமல் இருக்க மரங்களுக்கு இடையே தொங்குபாலம்
குரங்குகள் விபத்தில் சிக்காமல் இருக்க மரங்களுக்கு இடையே தொங்குபாலம் வனத்துறையினர் அமைத்தனர்
மறையூரை அடுத்த சின்னாரில் வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான குரங்குகள் உள்ளன. மேலும் அபூர்வ வகை குரங்குகளும் இங்கு உள்ளன. இந்த குரங்குகள் மறையூர் கரிமுட்டி பகுதியில் இருந்து சின்னார் வரை உள்ள மரங்களில் விளையாடி மகிழும். சில நேரங்களில் சாலையின் மறுபுறம் உள்ள மரங்களில் ஏறுவதற்காக சாலையை கடந்து செல்லும். அப்போது அந்த வழியாக வரும் வாகனங்கள் மோதி அவை பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தன.
இதையடுத்து குரங்குகள் விபத்தில் சிக்காமல் இருக்க சின்னார் வனப்பகுதி முழுவதும் சாலையின் இருபுறமும் உள்ள மரங்களுக்கு இடையே மரக்கட்டைகளால் தொங்குபாலம் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், குரங்குகள் சாலையில் நடந்து செல்வதாலேயே விபத்தில் சிக்குகின்றன. இதைதடுக்க சாலையின் இருபுறங்களில் உள்ள மரங்களுக்கு இடையே தொங்குபாலம் அமைத்துள்ளோம். இதன் மூலம் அவை எளிதாக சாலையை கடந்து செல்ல முடியும் என்றனர்.