வேளச்சேரியில் என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு

வேளச்சேரியில் துணிகரம்: என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு ‘பீரோ புல்லிங்’ கொள்ளையர்கள் கைவரிசை

Update: 2017-03-19 21:30 GMT

ஆலந்தூர்

வேளச்சேரியில் என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை போனது. பீரோவை ஜன்னல் ஓரமாக இழுத்து, அதில் இருந்த நகையை ‘பீரோ புல்லிங்’ கொள்ளையர்கள் திருடிச்சென்று உள்ளனர்.

என்ஜினீயர்

சென்னை வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர், 5–வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் வசித்து வருபவர் ராம்பிரபு(வயது 26). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ராம்பிரபு, குடும்பத்தினருடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கினார். நேற்று அதிகாலை அவரது வீட்டுக்கு உறவினர்கள் வந்தனர். அப்போது வீட்டின் மற்றொரு அறை கதவை திறந்து பார்த்த போது, அங்கிருந்த பீரோ ஜன்னல் ஓரமாக இழுத்து வைக்கப்பட்டு இருந்ததுடன், பீரோவின் கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

30 பவுன் நகை கொள்ளை

பின்னர் பீரோவை சோதனை செய்த போது அதில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் திருட்டு போய் இருப்பது தெரிந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் அந்த அறையில் இருந்த பீரோவை இரும்பு கம்பியால் ஜன்னல் ஓரமாக இழுத்து, பீரோ கதவை உடைத்து நகையை திருடிச்சென்றது தெரிந்தது.

இந்த அறையின் கதவு பூட்டப்பட்டு இருந்ததாலும், வீட்டின் மற்றொரு அறையில் ராம்பிரபு குடும்பத்தினர் படுத்து தூங்கியதாலும் மர்மநபர்கள் பீரோவை உடைத்து திருடும் சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை என்று தெரிகிறது.

நகை பெட்டிகள் கிணற்றில் வீச்சு

இது குறித்த புகாரின்பேரில் வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் நகை இருந்த பெட்டிகள் கிடந்தன. மர்மநபர்கள் நகைகளை எடுத்துக்கொண்டு வெறும் பெட்டிகளை கிணற்றுக்குள் வீசிச்சென்று உள்ளனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை பீதிக்கு உள்ளாக்கி வரும் ‘பீரோ புல்லிங்’ கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்