செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.3 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கிவைக்கப்பட்டு இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.;
செங்குன்றம்
செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகத்தம்மன் நகர் மேட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டு உள்ளதாக சோழவரம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த குடோனில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த குடோனில் சுமார் 4 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட வனத்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் பறிமுதல்அதன்பேரில் கும்மிடிப்பூண்டி வனசரக அலுவலர் மாணிக்கவாசகம், பொன்னேரி வனத்துறை அதிகாரி ஞானப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சோழவரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ரவி, காமராஜ் ஆகியோர் முன்னிலையில், குடோனில் பதுக்கிவைக்கப்பட்டு இருந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், இந்த குடோன் செங்குன்றத்தை அடுத்த பி.டி.மூர்த்தி நகரைச் சேர்ந்த பிரபல செம்மரக்கடத்தல் மன்னன் ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சிகுடோனில் பதுக்கிவைக்கப்பட்டு இருந்த செம்மரக்கட்டைகளை கன்டெய்னர் மூலம் சிங்கப்பூர், மலேசியா, சீனா போன்ற வெளி நாடுகளுக்கு கடத்திச்செல்ல முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது.
பறிமுதலான செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.3 கோடி என கூறப்படுகிறது. குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்து இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.