கொட்டிவாக்கத்தில் டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு பணம் கொள்ளை
டாஸ்மாக் கடையின் சுவரில் மர்ம நபர்கள் துளை போட்டு உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
ஆலந்தூர்
சென்னை கொட்டிவாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையில் சூப்பர்வைசராக முத்துவேல் (வயது 46), விற்பனையாளர்களாக லட்சுமணன் (43), பிரபாகரன் (41) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்துக்கொண்டு மதுபான கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
பின்னர் நேற்று பகல் மதுபான கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர்.
பணம் கொள்ளைஅப்போது கடையில் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மதுபான கடையையொட்டி அமைந்துள்ள பாரின் சுவரில் துளை போட்டு அது வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த மதுபானம் விற்ற பணம் ரூ.2 லட்சத்து 74 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை பொருள் விற்றவர் கைது* கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்றதாக வியாசர்பாடியை சேர்ந்த பெரியசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* பெரவள்ளூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரியை துண்டு சீட்டில் எழுதி விற்றதாக புளியந்தோப்பை சேர்ந்த நாகராஜன் (49) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* கொடுங்கையூரை சேர்ந்த ஷேர்ஆட்டோ டிரைவரான குமார் (31) நேற்று முன்தினம் பாரிமுனை பகுதியில் தூங்கியபோது அவரது மணிபர்சை திருடியதாக மீஞ்சூரை சேர்ந்த சூர்யா (21) என்பவர் கைது செய்யப்பட்டார்.
* பெண்களிடம் செல்போன் பறிக்கும் சம்பவங்களை தொடர்ந்து அசோக்நகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் தனிப்படை போலீசார் துப்பு துலக்கியதில் செல்போன் பறிக்கும் கும்பலை சேர்ந்த சதீஷ் (26) உள்பட 3 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மற்றும் 3 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.