கீரனூரில் நீதிபதிகள், அமைச்சர் பங்கேற்ற விழாவில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மோதல்

கீரனூரில் நீதிபதிகள், அமைச்சர் பங்கேற்ற விழாவில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மோதிக் கொண்டனர். அப்போது அவர்கள் நாற்காலிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-03-19 23:00 GMT
கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் ரூ.2 கோடியே 67 லட்சம் செலவில் லிப்ட் வசதி, குளிர்சாதன வசதியுடன் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட உரிமையியல் நீதிமன்ற கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு சென்னை ஐகோர்ட்டு புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பு நீதிபதி செல்வி வேலுமணி தலைமை தாங்கி, புதிய கட்டிடத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார், அமைச்சர் விஜயபாஸ்கர், ஆறுமுகம் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் கணேஷ், போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், மாவட்ட நீதிபதி தமிழ்செல்வி, புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அனில்குமார் மற்றும் மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மோதல்

விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, ‘மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா...’ என்று பேச்சை ஆரம்பித்தார். அப்போது விழாவில் கலந்து கொண்ட தி.மு.க. வழக்கறிஞர்கள் எழுந்து நின்று, அரசியல் பேசாதீர்கள் என்று கூச்சலிட்டனர். அவர்களுக்கு எதிராக அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் மற்றும் அ.தி.மு.க.வினரும் கோஷமிட்டனர்.

இதனால் தி.மு.க.- அ.தி.மு.க.வினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை தூக்கி வீசினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஆனாலும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து பேசி முடித்தார். விழா மேடையில் இருந்த நீதிபதிகள் நடந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசில் புகார்

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரை சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து தி.மு.க. வழக்கறிஞர் தவமணி, நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவின்போது அ.தி.மு.க.வை சேர்ந்த பாலசுப்பிரமணியன், கார்த்திக்பிரபாகரன் மற்றும் 20 பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கியதாக கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

36 பேர் கைது

முன்னதாக நேற்று காலை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் அந்த கட்சியினர், அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குகள் நடந்து கொண்டிருப்பதால், அவர் நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று கூறி அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதற்காக கீரனூர் கடைவீதியில் ஊர்வலமாக வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கருப்பு கொடியுடன் ஊர்வலமாக வந்த செல்லப்பாண்டியன் உள்பட 36 பேரை கைது செய்தனர். இந்த சம்பவங்களால் கீரனூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்