சந்தேகத்தை போக்க தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

வாக்குப்பதிவில் உள்ள சந்தேகத்தை போக்க தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப்பதிவு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.;

Update: 2017-03-19 22:45 GMT
திருச்சி,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் இஸ்லாமிய பிரசார பேரவை மாநில செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கி பேசினார். மாநில துணை தலைவர் ரிபாயி, மாநில பொதுச்செயலாளர் ஹமீது, திருச்சி மாவட்ட செயலாளர் உதுமான் அலி உள்பட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாளை கருத்தரங்கு

முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா, சச்சார் கமிட்டிகளின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளன.

இந்த பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக மார்ச் 21-ந்தேதி (நாளை) சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்து பேசுகிறார்கள்.

தலைகுனிவு

உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக 60 சதவீத வாக்குகள் விழுந்து உள்ளன. பாரதீய ஜனதா கட்சியின் முதல்- மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள யோகி ஆதித்ய நாத் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர். அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தும். கோவையில் திராவிடர் விடுதலை கழக மாவட்ட நிர்வாகி உமர் பாரூக் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்பதை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்யவேண்டும்.

வாக்குச்சீட்டு முறை

உத்தரபிரதேச மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்து பாரதீய ஜனதா வெற்றி பெற்றதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறி இருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நடைபெற உள்ள தேர்தலில் பழைய வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என கூறி இருக்கிறார். வளர்ச்சி அடைந்த அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் கூட பழைய வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே மின்னணு வாக்குப்பதிவில் உள்ள சந்தேகத்தை போக்க தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு முறையை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

தி.மு.க. வெற்றி பெறும்

திராவிட பூமியான தமிழகத்தில் பாரதீய ஜனதா கால் ஊன்ற முடியாது. ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார். தி.மு.க. செல்வாக்கான கட்சியாக உள்ளது. மற்றவை எல்லாம் உதிரி கட்சிகள் தான். தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து த.மு.மு.க. நிர்வாகிகள் பிரசாரம் செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்