கிராமத்தில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 பேர் காயம்

பெரியகுரும்பப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2017-03-19 22:45 GMT
இலுப்பூர்,


புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள பெரியகுரும்பப்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவை முன் னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை காலை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், காரைக்குடி, திண்டுக்கல், கண்ணாபுரம், லால்குடி, இலுப்பூர், கீரனூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து கலந்துகொண்ட 350 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

34 பேர் காயம்

காளைகள் முட்டியதில் 34 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் புதுக்கோட்டை, திருச்சி அரசு மருத்துவமனைகளில் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயம், குத்துவிளக்கு, கட்டில், மின்விசிறி, சைக்கிள், ரொக்கப்பணம் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன.

பாதுகாப்பு

ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட கலெக்டர் கணேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் இலுப்பூர் போலீசார் ஈடுபட்டிருந்தனர். 

மேலும் செய்திகள்