வெள்ளியணை பெரியகுளத்தில் மாற்றுத்திட்டத்தின் மூலம் நீர் நிரப்ப வேண்டும்

அகலமற்ற கால்வாய் மற்றும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள வெள்ளியணை பெரிய குளத்தை தூர்வாரி மாற்றுத்திட்டத்தின் மூலம் நீர் நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-03-19 22:45 GMT
வெள்ளியணை,

கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி என 2 ஆறுகள் ஓடினாலும், அதனால் பயனடையும் பகுதி மிகக்குறைவே. மாவட்டத்தின் தென்பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. எனவே மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க சிறியதும், பெரியதுமாக பல்வேறு குளங்களை முன்னோர்கள் வெட்டி வைத்தனர். அந்த வகையில் வெள்ளியணையில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தில் நீர் நிரம்பினால் சுற்றுப்புறங்களில் உள்ள சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளில் நீர் அதிகளவில் சுரக்கும்.

கோரிக்கை

அதன்மூலம் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தடையின்றி தண்ணீர் கிடைத்து வந்தது. இப்படி இந்த குளம் நிறைவது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும். எனவே இந்த குளத்திற்கு நீர் கொண்டு வர இப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கரூர் மாவட்டம் வந்து அமராவதியில் கலக்கும் குடனாற்றின் குறுக்கே அணை கட்டி அதில் இருந்து, கால்வாய் வெட்டி வெள்ளியணை குளத்திற்கு நீர் கொண்டு வரவேண்டும் என அரசுக்கு கடந்த 1957-ம் ஆண்டில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தனர்.

வீணாக செல்கிறது

தொடர்ந்து அந்த கோரிக்கை மக்களால் எழுப்பப்பட்டு வந்ததனால் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அழகாபுரி கிராமத்தில் குடகனாறு அணை 1976-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வரும் வகையில் 55 கிலோ மீட்டருக்கு கால்வாய் வெட்டி வெள்ளியணை குளத்திற்கு நீர்கொண்டுவர பணிகள் நடைபெற்று முடிந்தன. ஆனால் இதுவரை ஒருமுறை கூட குடகனாற்றின் நீர் வெள்ளியணை குளத்திற்கு வந்து குளம் நிரம்பவில்லை. இதற்கு காரணம் குடகனாற்றில் திடீரென்று அதிகப்படியான நீர் அணைக்கு வரும் போது அதில் இருந்து உபரிநீரை வெள்ளியணை குளத்திற்கு அனுப்புவதற்கு கால்வாயின் அகலம் போதாமையால் அணையின் பாதுகாப்பு கருதி ஷட்டர் திறக்கப்பட்டு அமராவதி ஆற்றுக்கு தண்ணீர் வீணாக செல்கிறது. இதுகுறித்து தொடர்ந்து அப்பகுதி மக்கள் கால்வாயை அகலப்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தும் இதுவரை அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

மாற்று த்திட்டம்

இந்த நிலையில் குளமும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமலும், குடகனாறு அணையில் இருந்து வரும் கால்வாயும் தூர்வாரப்படாமலும் இருக்கிறது. தற்போது சீமைக்கருவேல மரங்கள் குளத்தில் இருந்து அகற்றப்பட்டு வரும் நிலையில் அரசு உரிய நிதி ஒதுக்கி குளத்தை தூர்வாரி கரைகளை பலப்படுத்தியும், கால்வாயை தூர் வாரி அகலப்படுத்தியும் தரவேண்டும். மேலும் 60 ஆண்டுகளாகியும் குடகனாறு நீர் வெள்ளியணை குளத்திற்கு கொண்டு வர முடியாத சூழ்நிலையில் வெள்ள காலங்களில் காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீரை ராட்சத குழாய்கள் அமைத்து மின்மோட்டார்கள் உதவியுடன் வெள்ளியணை குளத்திற்கு கொண்டு வந்து நிரப்பி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று மாற்று திட்டத்தை தற்போது அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையாக வைத்துள்ளனர். நீர் மேலாண்மையை திறம்பட செயல்படுத்த முன்வராத காரணத்தால் இன்று தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

எனவே எந்தெந்த வகையில் எல்லாம் தண்ணீரை சேமிக்க முடியுமோ அவற்றை உரிய திட்டங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பதே இன்றைய காலகட்டத்தின் தேவை என்பதை கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

மேலும் செய்திகள்