குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி சபாநாயகரிடம் பொதுமக்கள் கோரிக்கை

அவினாசி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி சபாநாயகர் தனபாலிடம், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2017-03-19 22:15 GMT

அவினாசி,

அவினாசி பகுதியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்படும் குடிநீரும் பொதுமக்களுக்கு போதுமான அளவு கிடைக்கவில்லை. எனவே குடிநீருக்காக சிரமப்படுகிறார்கள். எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, சாலை மறியல், தர்ணா என பல்வேறுபோராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் சபாநாயகரும், அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தனபால் நேற்று அவினாசியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம், பொதுமக்கள் “அவினாசி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும், மடத்துப்பாளையம் ரோட்டில் கட்டப்பட்டுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் குடோனை மாற்ற வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

இதற்கு பதிலளித்து சபாநாயகர் பேசியதாவது:–

குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்

கியாஸ் சிலிண்டர் குடோன் பிரச்சினையை முன் கூட்டியே என் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். பொதுவாக பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் எந்த திட்டத்தையும் ஆதரிக்க மாட்டோம்.

வருகிற 22–ந் தேதி நடைபெறும் கலெக்டர் தலைமையில் கூட்டத்தில் இது குறித்து ஒரு சுமூகமான முடிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும்.அவினாசி பகுதியில் குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க மேட்டுப்பாளையத்தில் இருந்து மேலும் ஒரு புதிய குழாய் அமைத்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, கேட்டும் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்