ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு, கொங்குநாடு மக்கள் தேசியகட்சி ஆதரவு
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு அளிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.
அனுப்பர்பாளையம்,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவர் சென்னியப்பன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ரோபோ ரவி வரவேற்று பேசினார். மாநில பொருளாளர் பாலு, இளைஞரணி செயலாளர் சூரிய மூர்த்தி, தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொன்னுவேல், துணை செயலாளர்கள் நடராஜ், தங்கவேல், வர்த்தக அணி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு நிருபர்களிடம் கூறியதாவது:–
கொங்கு மண்டல விவசாயிகள், கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிப்பது, உயர் அழுத்த மின் கோபுரம் அமைத்தல் உள்ளிட்ட தொடர் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். அத்திக்கடவு–அவினாசி திட்டத்துக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.3 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த பணியும் தொடங்கப்படவில்லை.
தி.மு.க.வுக்கு ஆதரவுதற்போது அந்த திட்டத்துக்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற தொடர்ந்து போராடுவோம். தமிழக பட்ஜெட்டில் சாயகழிவுநீர் பிரச்சினை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் திருப்பூர், ஈரோடு, கரூர் தொழில் துறை பாதிக்கப்படும். டெல்லி பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுவதை ஏற்று கொள்ள முடியாது. இதை மத்திய அரசு சரியான முறையில் விசாரணை நடத்த வேண்டும்.
ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவை அளிக்க முடிவெடுத்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி தமிழக ஆட்சி மாற்றத்துக்கான முதல் படியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.