இரட்டை பெண் குழந்தைகள் ரூ.54 ஆயிரத்துக்கு விற்பனை தாய் உள்பட 4 பேர் கைது
இரட்டை பெண் குழந்தைகளை ரூ.54 ஆயிரத்துக்கு விற்ற வழக்கில் தாய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் வடசேரி அறுகுவிளையை சேர்ந்த ஒரு பெண், தனக்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பணத்துக்காக விற்பனை செய்ததாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட பெண்ணிடம் நேரில் விசாரணை நடத்தினர். இதில் குழந்தைகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், பெற்ற குழந்தைகளை விற்றவர், முத்து என்பவரின் மனைவி நீலாவதி (வயது 20) என்பது தெரியவந்தது. நீலாவதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
ரூ.54 ஆயிரத்துக்கு விற்பனைகுடும்பம் வறுமையால் வாடியதால், பிறந்த 3 நாட்களே ஆன நிலையில் நீலாவதி ஒரு குழந்தையை ரூ.4 ஆயிரத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், மற்றொரு குழந்தையை தம்மத்துக்கோணத்தைச் சேர்ந்த வனஜா (38) என்பவருக்கு ரூ.50 ஆயிரத்துக்கும் விற்றது தெரியவந்தது.
அந்த குழந்தைகளை விற்க அவருடைய சகோதரிகள் ஈத்தாமொழியைச் சேர்ந்த கலா (22), ஜெயா (40) ஆகியோர் வற்புறுத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், வனஜாவிடம் விற்கப்பட்ட குழந்தையை மீட்டனர்.
4 பேர் கைதுஇதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளை விற்றதாக தாய் நீலாவதி, அவருடைய சகோதரிகள் கலா, ஜெயா மற்றும் குழந்தையை வாங்கிய வனஜா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மீட்கப்பட்ட குழந்தை நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ரூ.4 ஆயிரம் கொடுத்து நீலாவதியிடம் இருந்து மற்றொரு குழந்தையை வாங்கிய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.