செய்யூர் அருகே இளம்பெண் மர்ம சாவு கணவரிடம் போலீசார் விசாரணை

செய்யூர் அருகே கிணற்றில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2017-03-19 22:30 GMT

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த ஓனம்பாக்கத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் செல்லமுத்து. ஒப்பந்ததாரராக உள்ளார். இவருக்கும் மதுராந்தகத்தை அடுத்த தாதங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரது மகள் அமுல்பிரியா (வயது 25) என்பவருக்கும் கடந்த 4.5.2016 அன்று திருமணம் நடந்தது.

கூடுதல் வரதட்சணை கேட்டு அமுல்பிரியாவை கணவர் செல்லமுத்து மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

கிணற்றில் பிணமாக கிடந்தார்

இந்த நிலையில் நேற்று காலை அமுல்பிரியா தனது வீட்டின் அருகே வயல்வெளியில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி செய்யூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அமுல்பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சுரேஷ்குமார் ‘‘தனது மகள் அமுல்பிரியாவை அவரது கணவர் செல்லமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், எனது மகள் சாவில் மர்மம் உள்ளது. அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் எனவும் செய்யூர் போலீசில் புகார் கொடுத்தார்.

கணவரிடம் விசாரணை

இதையடுத்து போலீசார் செல்லமுத்துவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அமுல்பிரியா கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அமுல்பிரியா திருமணமாகி 8 மாதங்கள் ஆவதால் இதுபற்றி மதுராந்தகம் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்