கும்மிடிப்பூண்டியில் சமையல் காண்டிராக்டர் கொலை 2–வது மனைவிக்கு வலைவீச்சு

கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்: சமையல் காண்டிராக்டர் கொலை 2–வது மனைவிக்கு வலைவீச்சு

Update: 2017-03-19 22:45 GMT

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டியில் சமையல் காண்டிராக்டர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது 2–வது மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சமையல் காண்டிராக்டர்

கும்மிடிப்பூண்டி செயிண்ட் மேரிஸ் முதல் தெருவைச் சேர்ந்தவர் சிவா என்ற சிவக்குமார் (வயது 33). சமையல் காண்டிராக்டர். இவரது மனைவி ரேணுகாதேவி (31). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

2–வது மனைவி

சிவா, தனது வீட்டின் அருகே ஏரிக்கரையோரம் உள்ள திருவள்ளுவர் நகரில் வசித்து வந்த பிரியா (31) என்பவரை தனது திருமணத்திற்கு முன்பு இருந்தே காதலித்து வந்தார். பிரியா கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.

ரேணுகாதேவியுடன் திருமணம் ஆன கையோடு பிரியாவையும் இரண்டாவதாக சிவா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சிவாவிற்கும், பிரியாவிற்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

திடீர் மாயம்

இந்த நிலையில் ரேணுகாதேவியின் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் பிற்பகல் வெளியே சென்ற சிவா, நேற்று மாலை வரை வீடு திரும்பவில்லை. திடீரென அவர் மாயமானார். இதனால் ரேணுகாதேவி, பல முறை அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

இதற்கிடையே நேற்று இரவு 7 மணியளவில் 2–வது மனைவி பிரியா வீட்டின் வாசலில் சிவாவின் மோட்டார் சைக்கிளும், மினி லோடு வேனும் நின்று கொண்டு இருந்தது. இதனை அறிந்த ரேணுகாதேவி, தனது உறவினர் குமார் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.

கொலை

அங்கு வந்த குமார், வீட்டின் அருகே சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது. ஆனால் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. பிரியாவையும், அவரது குழந்தைகளையும் காணவில்லை. எனவே வீட்டின் கதவை உடைத்து குமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டிற்குள் கழுத்து மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சிவா பிணமாக கிடந்தார். ரத்தம் வீட்டின் வாசல் வரை வழிந்தோடிய நிலையில் காணப்பட்டது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கொலை செய்தது யார்? பிரியாவிற்கு தொடர்பு உள்ளதா? கள்ளக்காதல் தகராறில் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான பிரியாவையும் போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்