ஊட்டியில் மினி பஸ்களின் கட்டணம் திடீர் உயர்வு பொதுமக்கள் அதிருப்தி

ஊட்டியில் மினி பஸ்களின் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

Update: 2017-03-19 22:00 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் இங்கு அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. தனியார் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் ஊட்டியில் இருந்து வெளியூர் செல்லவும், கிராம பகுதிகளுக்கு செல்லவும் அரசு பஸ்களையே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர குறிப்பிட்ட இடங்களுக்கு மினிபஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த மினி பஸ்களில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கட்டணம் உயர்வு

ஊட்டி மார்க்கெட் பஸ் நிலையத்தில் இருந்து தலைக்குந்தா பகுதிக்கு 16 மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர நஞ்சநாடு, எல்லநள்ளி, மஞ்சனக்கொரை உள்ளிட்ட இடங்களுக்கும் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மினி பஸ்களில் திடீரென்று கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். ஊட்டியில் இருந்து தலைக்குந்தாவிற்கு ரூ.6 கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது 2 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.8 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதேபோல் பிங்கர்போஸ்ட், ரோகிணி, ஹில்பங்க் உள்ளிட்ட இடங்களுக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. ஊட்டியில் இயக்கப்படும் மினி பஸ்களில் திடீரென்று கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு பல்வேறு தரப்பினர் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊட்டியில் இருந்து தலைக்குந்தாவிற்கு செல்லும் நகர பஸ்சில் ரூ.4 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்களிலும் குறைந்தபட்சமாக ரூ.4–ம், விரைவு பஸ்களில் ரூ.8 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் மினி பஸ்களில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதேபோல் ஊட்டியில் இருந்து எல்லநள்ளி, நஞ்சநாடு, எமரால்டு, மஞ்சனக்கொரை மற்றும் எல்லநள்ளியில் இருந்து கேத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் மினி பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அரசின் அனுமதியின்றி திடீரென்று கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்