பொதுமக்களின் பிரதிநிதிகள் சிறுபான்மையினர் ஆணையக்குழுவினரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்
பொதுமக்களின் பிரதிநிதிகள் சிறுபான்மையினர் ஆணையக்குழுவினரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் கலெக்டர் சங்கர் தகவல்
ஊட்டி
சிறுபான்மையினத்தை சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரை நேரில் சந்தித்து தங்களுடைய குறைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சங்கர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழுவினர்தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் இன்று (திங்கட்கிழமை) ஊட்டிக்கு வருகிறார்கள். பின்னர் அவர்கள் சிறுபான்மையினர் சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையினத்து மக்கள் பிரதிநிதிகளை நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.
கருத்துக்களை கூறலாம்தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழு சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களுக்கும் வருகை தந்து அவர்கள் கருத்துக்களையும் கேட்டறிய உள்ளனர். எனவே, சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தை சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கான தக்க கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.