ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கு எண் உள்பட 5 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்
நீலகிரி மாவட்ட ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கு எண் உள்பட 5 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அதிகாரி தகவல்
ஊட்டி,
நீலகிரி மாவட்ட ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதிய புத்தகம், வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை உள்பட 5 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கருவூலக அதிகாரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
வருமான வரி கணக்கு எண்மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நேர் காணலுக்கு வர வேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ–சேவை மையங்கள் வழியாக நேர்காணலை இணையதளத்தில் (www.jeevanpramaan.gov.in) ஆதார் அட்டை வாயிலாக பதிவு செய்ய நடப்பாண்டு முதல் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம் மற்றும் நடைமுறையில் உள்ள சேமிப்பு கணக்கு எண், ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை ஆகிய 5 ஆவணங்களுடன் வர வேண்டும்.
சான்றொப்பம் பெற வேண்டும்நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் வாழ்வு சான்று படிவத்தில் மேற்குறிப்பிட்ட 5 ஆவணங்களின் நகல்களுடன் அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஓய்வூதிய வங்கி கணக்கு உள்ள கிளை மேலாளர் அல்லது அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் அல்லது தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் அதிகாரி இவர்களில் யாராவது ஒருவரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.
மேலும் ஓய்வூதியர்கள் தற்போதைய இருப்பிட முகவரி, செல்போன் எண் ஆகிய விவரங்களையும் அளிக்க வேண்டும். ஓய்வூதியர்கள் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நேர்காணலுக்கு வர தவறினாலோ? அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச்சான்றினை அனுப்ப தவறினாலோ? ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகஸ்டு மாதம் முதல் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சான்றுகளுடன் மாதிரி படிவத்தை www.tn.gov.in/karuvoolam என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுத்துறை வங்கிகளின் மூலம் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தமிழ்நாடு மின்வாரியம், ரெயில்வே, அஞ்சல் துறை, தொழிலாளர் வைப்பு நிதித்திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.