தேனி அருகே தலையில் கல்லைப்போட்டு ஓட்டல் ஊழியர் கொலை

தேனி அருகே தலையில் கல்லைப்போட்டு ஓட்டல் ஊழியர் கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2017-03-19 22:30 GMT
தேனி அருகே தலையில் கல்லைப்போட்டு ஓட்டல் ஊழியரை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஓட்டல் ஊழியர்

தேனி அருகே உள்ள கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரையா. இவருடைய மகன் விஷ்ணுபாண்டி (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது பாட்டி பாப்பம்மாள் என்பவர் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.

அப்போது சில மர்ம நபர்கள் அங்கு வந்து தூங்கிக் கொண்டு இருந்த விஷ்ணுபாண்டி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பாப்பம்மாளுக்கு சரியாக காது கேட்காது என்பதால் அவருக்கு கொலை நடந்த சம்பவம் பற்றி தெரியவில்லை.

போலீஸ் வலைவீச்சு

பின்னர் நேற்று காலையில் பார்த்த போது உடலில் காயங்களுடன் விஷ்ணுபாண்டி கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வீரபாண்டி போலீசார் விரைந்து சென்று அவருடைய பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் ஒரு கோழி திருடு போய் உள்ளது. இதனால் விஷ்ணுபாண்டிக்கும், அவருடைய நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட விஷ்ணுபாண்டி மீது தேனி, சின்னமனூர் போலீஸ் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்