2 நாட்கள் விடுமுறைக்கு பின் கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

2 நாட்கள் விடுமுறைக்கு பின் கர்நாடக சட்டசபை இன்று(திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. பா.ஜனதாவின் தர்ணா போராட்டம் முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2017-03-19 21:00 GMT

பெங்களூரு,

2 நாட்கள் விடுமுறைக்கு பின் கர்நாடக சட்டசபை இன்று(திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. பா.ஜனதாவின் தர்ணா போராட்டம் முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

2 நாட்கள் முடங்கியது

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 15–ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் முதல்–மந்திரி சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து குறிப்பேடு(டைரி) விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி வழங்க கோரி பா.ஜனதா கட்சி சட்டசபையில் தர்ணா போராட்டம் நடத்தியது. இதனால் சட்டசபை நடவடிக்கைகள் 2 நாட்கள் முடங்கியது. இதையடுத்து சட்டசபை திங்கட்கிழமைக்கு(அதாவது இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று(திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. குறிப்பேடு விவகாரம் குறித்த விவாதத்திற்கு அனுமதி வழங்கும் வரை சபையை நடத்த விட மாட்டோம் என்று எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கடந்த வெள்ளிக்கிழமை(17–ந் தேதி) சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் அறிவித்தார்.

சட்டசபை இன்று கூடுகிறது

அதன்படி கர்நாடக சட்டசபை இன்று கூடியதும், பா.ஜனதா உறுப்பினர்கள் 3–வது நாளாக தர்ணா போராட்டம் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றும் சட்டசபை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “சட்டசபையில் இன்று தர்ணா போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது அதை வாபஸ் பெற்று சட்டசபை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதா? என்பது குறித்து எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்“ என்றார்.

மேலும் செய்திகள்